இரவு மூன்று மணி..
லேசாய் ஒரு சிணுங்கல் சத்தம்
தொட்டிலின் ஓரமிருந்து..
கட்டிலின் ஓரம்
பாலூட்டிய களைப்பில் என் மறுபாதி
அலுப்பு அழுகையாய் மாறும்முன்
அள்ளி எடுத்தேன் அவனை
ஒரு வார உறவை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்... கண்கொட்டாமல்;
இந்த நேரத்தில் அவன் எதிர்பார்த்தது
அவனின் அன்னையையோ அல்லது அவளின் அன்னயையோ !
சற்று நேர மௌனத்திற்குப்பின்
ஏமாற்றத்தின் வெளிப்படாய்
உதடுகள் பிதுங்க
கண்கள் சுருங்க
அலறுவதற்கு ஆயத்தமானான் !
ஆராரோ..ஆரீராரோ
ஜோ ஜோ பாப்பா
எதற்கும் மசியவில்லை ...
பள்ளியில் படித்த
பாரதியார் பாடல்கள் நினைவுக்கு வந்தன
தேசபக்தி, பெண்விடுதலை, சமத்துவம்
தாலாட்டுக்கு பதில் அத்தனையும்
களமிறங்கின.. எனினும் அமைதி இல்லை!
இறுதியாய் வந்தார் இளையராஜா
செவிசாய்க்கத் துவங்கினான்
கூடவே தலையும் சாய்த்தான்!
என் கரகர குரலுக்கில்லை
கதகதப்பில் தான் கண் துயில்ந்தான் என்றாலும்
இசைஞானிக்கு நன்றி..
ஒன்றரை மணிநேர உரையாடளுக்குப்பின்
தொட்டிலில் இட்டு தலையணை தேடும்போது
அவனை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன்
மெலிதாய் இதழில் ஒரு புன்னகை பூத்தான்!
இன்றிரவு அவனுக்கு
நானும் தாய் தான்...
No comments:
Post a Comment