Pages

Friday, October 10, 2014

கொண்டாட்டம்!



வானைக் கிழித்து விண்வெளி கடந்து 
செவ்வாயை மங்கள்யான் முத்தமிட்டபோது 
உடனுழைத்த ஊழியர்களை ஆரத்தழுவிய
சேலை விஞ்ஞானிகளின் சாதனையை 
கொண்டாடும் இந்தியா.... 

கொரியாவில் வெற்றிக்கொடிகட்டிய 
ஆண் தோழர்களுக்கினையாக 
வெண்கலம், வெள்ளி, தங்கம் எனப் 
பதக்கங்கள் வாரிக்குவித்த 
வைர வீராங்கனைகளின் வெற்றியை 
கொண்டாடும் இந்தியா.... 

தினந்தோறும் 
காலைக்கதிரவன் எட்டிப்பார்க்கும்முன் 
உறக்கம் கலைத்து உணவைத் தவிர்த்து 
பெற்றெடுத்த மக்கட்க்கும் 
கரம்பிடித்த மணாளனுக்கும்
உடனிருக்கும் உறவினர்க்கும் 
நாள்முழுதும் 
கடிகார நொடிமுள்ளாய் உழைத்து 
ஊரடங்கியப்பின் உறங்கப்போகும்
எம் தாய்மாரின் தியாகத்தை 
எப்போது கொண்டாடும் ?!?!?

Wednesday, June 18, 2014

Darling to Diaper :)

இரவு 12 மணி
இடப்பக்கமிருந்து இல்லாள்
இறுகப்பிடித்திழுத்து
முணுமுணுத்தாள் முத்தான மூன்று வார்த்தைகள்...
இளங்காதல் மயக்கத்தில்
அலைபேசிகள் அலற அலற
காலக்கோடுகள் கரைந்திட
பகிர்ந்த பலகோடி நூறாயிரம் வார்த்தைகள்...
தேன்நிலவின் கிறக்கத்தில்
இரவு பகலாய் பொழுதொன்றின்றி
மௌன நிசப்தங்களில்
மழையாய் பொழிந்து
முத்தங்களால் மொழிந்த வார்த்தைகள்...
திருமணத்தின் முதலாறு திங்கட்களில்
புரிதலின் போராட்டத்தில்
வீசியெறிந்த வசைகளும்
பின் வாரியிறைத்த மன்னிப்புகளும்
கடிந்துரைத்த கண்டிப்பும்
பின் கசிந்துரைத்த வார்த்தைகள்...
அனைத்தும் கரைந்தோடின
இன்று காதலி
காதோரம் சொன்ன மூன்றே வார்த்தைகளில்..
"தம்பிக்கு diaper மாத்துங்க"
காதலின் பரிணாம வளர்ச்சி 

Thursday, April 10, 2014

தாயுமானவன்


இரவு மூன்று மணி..
லேசாய் ஒரு சிணுங்கல் சத்தம் 
தொட்டிலின் ஓரமிருந்து..
கட்டிலின் ஓரம் 
பாலூட்டிய களைப்பில் என் மறுபாதி 

அலுப்பு அழுகையாய் மாறும்முன் 
அள்ளி எடுத்தேன் அவனை 
ஒரு வார உறவை 
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்... கண்கொட்டாமல்;
இந்த நேரத்தில் அவன் எதிர்பார்த்தது 
அவனின் அன்னையையோ அல்லது அவளின் அன்னயையோ !

சற்று நேர மௌனத்திற்குப்பின் 
ஏமாற்றத்தின் வெளிப்படாய் 
உதடுகள் பிதுங்க 
கண்கள் சுருங்க 
அலறுவதற்கு ஆயத்தமானான் !

ஆராரோ..ஆரீராரோ 
ஜோ ஜோ பாப்பா 
எதற்கும் மசியவில்லை ...

பள்ளியில் படித்த 
பாரதியார் பாடல்கள் நினைவுக்கு வந்தன
தேசபக்தி, பெண்விடுதலை, சமத்துவம் 
தாலாட்டுக்கு பதில் அத்தனையும் 
களமிறங்கின.. எனினும் அமைதி இல்லை!

இறுதியாய் வந்தார் இளையராஜா
செவிசாய்க்கத் துவங்கினான் 
கூடவே தலையும் சாய்த்தான்!

என் கரகர குரலுக்கில்லை 
கதகதப்பில் தான் கண் துயில்ந்தான் என்றாலும் 
இசைஞானிக்கு நன்றி..

ஒன்றரை மணிநேர உரையாடளுக்குப்பின் 
தொட்டிலில் இட்டு தலையணை தேடும்போது 
அவனை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன் 

மெலிதாய் இதழில் ஒரு புன்னகை பூத்தான்!
இன்றிரவு அவனுக்கு 
நானும் தாய் தான்...